Thursday, July 9, 2009

ஓடிப்போனவள் - உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக

இந்தக் கவிதையை ஆதாரமாகக் கொண்டு...

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்
இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போனதன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி.

*********************************************

"தே.. பசங்க.. பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்ச நேரம் நிக்கவிடரானுங்களா.. " மனசுல
நினைச்சுக்கிட்டேன். என்னை, இங்க நிக்கறானே அந்தப் பய்யன் சொரன்டீட்டு இருக்கறதப் பாருங்க.18 வயசுதான் இருக்கும்.படிக்கற வயசுல ஏன் இப்படி புத்தி போகுது?..
மொதல்ல அந்தப் பக்கம் பார்ப்பான். அப்புறம் இந்தப் பக்கம் பார்குற மாதிரி என்னப் பார்ப்பான். ஏதாவது பஸ் வந்திச்சுன்னா பின்னாடி நகர்ர மாதிரி நகுந்து என்ன உரசுவான். கிட்டதிட்ட கால் மணிநேரமா இதயே செஞ்சுட்டிருக்கான். இவன யாருமே எதுவும் கேட்கமாட்டீங்களா?. 'நீ கூச்சல் போடலாமில்ல'ன்னு கேட்கறீங்களா.. என் தொழில் மட்டும் பாதிக்காத மாதிரி இருந்தா இவனையெல்லாம் உண்டில்லைன்னு பண்ணிருப்பன்.

என்னப்பத்தி சொன்னவாவது நீங்க ஹெல்ப் பண்றீங்களான்னு பார்கறேன் சார்.. என்னை பஸ் ஸ்டாப்லயோ, தெருமுனைலயோ இல்ல சில சமயம் கோவிலாண்டயோ பார்த்திருப்பீங்க .. ச்சே.. பிச்சைக்காரின்னு நினைக்காதீங்க சார்.. ஒரு விதமான சர்வீஸ் பண்றேன்னு நேனைசுக்கங்க. என்னை கதை, கவிதையில மட்டும் "விலைமகள் , தாசி" அப்படின்னு எழுதீட்டு, மத்தபடி "விபச்சாரி", "தேவடியா" அப்படின்னு என் காதிலவிழற மாதிரியே சொல்லுவாங்க.என் பேரு.. ம்ம்ம்ம்ம்.. ராணி சார். சுருக்கமா இருந்த ஞாபகம் இருக்குமில்ல. எவளோ ரேட்ன்னு அப்புறம் சொல்றேன். எனக்குன்னே ரெகுலர் கஸ்டமருங்க இருக்காங்க சார். அவங்களெல்லாம் நான் தேவிகா மாதிரியோ , சுகன்யா மாதிரியோ இல்ல ஸ்னேஹா மாதிரியோ இருக்கன்னு அவங்க வயசுக்கேத்த மாதிரி சொல்லுவாங்க. சில பேரு அவங்க கதை சொல்லுவாங்க. சில பேரு என்னோட கதையக் கேப்பாங்க. புருஷன் நொண்டி , சாப்பிடவே வழியில்லை , லவர் ஏமாத்தீட்டான் அப்படின்னு தோன்றத சொல்லுவேன். அவங்க என்னை சமாதானப்படுத்த தோள்மேல கைய்யப்போடுவானுங்க. ஆனா ரொம்ப தொந்தரவு கொடுக்கறது தண்ணியடிச்சிட்டு வரவனுங்கதான் சார்.. கெட்டகெட்டவார்த்தையில திட்டுவானுங்க.. அடிப்பானுங்க .. இன்னும் விபரீதமாவெல்லாம் செய்வாங்க .. சொன்னா வாய் கூசும். இப்போ ஒன்னு சொல்லியே ஆகுனும் சார். நம்பாளுங்கல்லாம் தனியா இருந்தா உறசுவானுங்க இதே கூட்டமா இருந்தா ஏதோ வேண்டா வெறுப்பா பார்ப்பானுங்க.

நான் உங்ககிட்ட பேசீட்டு இருக்கறப்போ அந்தப் பொறம்போக்கு ரெண்டுவாட்டி உரசினான். கொஞ்சம் தள்ளி நின்னு கண்ணடிச்சான். மறுபடியும் என் பக்கத்துல வந்து நின்னான்.

அப்போ இந்தப்பக்கத்துல இருந்து
"இந்த பஸ் தி-நகர் போகுமா?" ஒரு 50 வயசு ஆள் கேட்டான்.
"போகாது.. " சொன்னேன்
அந்த ஆளுக்கு நான் யார்னு தெரிஞ்சிருக்கணும்.
"நீங்க எங்க போகணும் ?" சிரிச்சப்போ, இருந்த இருபது சொச்சம் பல்-ல்ல இருந்த பான்பராக் கறை தெரிந்துச்சு.
"நுங்கம்பாக்கம். இங்கிருந்து தி-நகர்க்கு பஸ் கம்மி ".
"எனக்கு-ம் நுங்கம்பாக்கதுல ஒரு வேலை இருக்கு. நாம ஆட்டோ-ல போலாமா?"
"போலாம்".

நான் ஆட்டோல ஏறினேன். அந்த ஆள் தன்னோட பைய ஓரத்துல வச்சிட்டு என்ன நெருக்கி ஒக்காந்தான். அந்தப் பய்யன் என்னை பார்த்துட்டே படில தொங்கிட்டுப் போனான்.

"பேர் என்ன?"

"மாலா"

"அன்னிக்கு ராணி-ன்ன?" சிரிச்சான்.

"ஞாபகம் இல்ல" நானும் சிரிச்சேன்.

"ரேட் அதேதான இல்ல ஏறீருச்சா?"

"அதே ரேட் தான்."

"ஆள்தான் கொஞ்சம் வெயிட் போட்டுட்ட.."

அவன் வாய் மட்டுமில்லாம கையும் பேசிட்டே வந்திச்சு. ஆட்டோ டிரைவர் அடிக்கடி பின்னாடி வர்ற வண்டிகள கண்ணாடில பார்த்திட்டே வந்தான்.
ஆட்டோ ஒரு பங்களாவுக்கு பக்கத்துல நின்னுச்சு. அடையாருன்னு நினைக்கறேன். அடுத்த தெருவுக்கு நடந்து போய் இன்னொரு பங்களாக்குள்ள போனோம்.

ச்சும்மா சொல்லக்குடாது, பங்களாவ பாத்துபாத்து கட்டிருக்கான். ஸ்விம்மிங் பூலு, தோட்டம், மூணு காரு.

கதவ திறந்தவருக்கு ஒரு 55 வயசு இருக்கும். சின்ன வயசுல சுருட்டமுடி இருந்திருக்கும் போல.. இப்போ இல்லை. ஆள் நல்ல சிவப்பு. நெத்தீல பட்டை. தங்க வாட்ச். வெள்ளை வேஷ்டி, கட்டம் போட்ட சட்டை.. கண்டிப்பா இவர் தான் இந்த பங்களாவோட ஓனர். கொஞ்ச நேரம் எனக்கும்.

டிவி-ல எனக்கு ரொம்ப பிடிச்ச கார்ட்டூன். எலிய பூனை தொரத்தீட்டிருந்திச்சு.

என் கூட வந்தவன் சிரிச்சிட்டே தலைய சொரிஞ்சான். அவங்க ரெண்டு பெரும் வெளிய போயிட்டு கொஞ்ச நேரத்துல "என் ஓனர்" மட்டும் உள்ள வந்தாரு.

"உன் பேரு என்னம்மா?"

"ராணி". அவர் 'ம்மா' போட்டு கூப்பிட்டது பிடிச்சிருந்திச்சு..

"என்ன வயசு?"

"22 சார்.." அஞ்சு வயச கொறச்சு சொன்னேன்..

"எனக்கு அந்த வயசுல ஒரு பையன் இருக்கான்.. அமெரிக்காவுல .. " செவுத்துல இருந்த போடோவுல ஒரு பய்யனும் ஒரு வெள்ளைக்காரியும் சிரிச்சிட்டிருந்தாங்க.
பய்யனுக்கும் முடி கொட்ட ஆரம்பிச்சிருந்தது.

".. "

"நீ ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா?"

"எப்பவாவது சார்.. கஸ்டமருங்க சொன்னா.."

"ப்ரிட்ஜ்ல இருக்கு. எடுத்திட்டு வா.. அப்படியே மிரிண்டாவும் எடுத்திட்டுவா.."

"இந்தாங்க சார்.. " பீரையும், மிரிண்டாவையும் அவர் முன் வைத்தேன்..

"உனக்குதான்.. சாப்பிடு"

"உங்களுக்கு சார்.."

"நான் சாப்பிட மாட்டேன்.."

பீர் கொஞ்சம் கசப்பா இருந்திச்சு. இனிமேல் பீர் தயாரிக்கும் பொது கொஞ்சம் சீனிய அல்லிப்போட்டானுங்கன்ன நல்லாருக்கும்.

"சார் கை கால் ஏதாவது அமுத்திவிடட்டான் சார்.. "

"அதெல்லாம் வேண்டாம்மா "..

".."

"நீ எப்படி இந்த தொழிழுக்கு வந்தே?" எல்லாரும் கேக்கற கேள்வீன்னாலும் அவர்ட்ட ஒரு அக்கறை இருந்திச்சு.

"தெர்ல சார்.. 13 வயசுலே வந்துட்டேன்.. ஒரு நாள் பொடவ கட்டி , பூவெல்லாம் வச்சு ஒருத்தனோட அனுப்புச்சாங்க.. அதுக்கப்புறம் பழகிடுச்சு.. " அவர்ட்ட உண்மைய சொல்லனும்னு தோணிச்சு..

"தப்பா தெரிலயா?"

"தெர்ல சார்.. சொன்னேன்ல பழகிடுச்சு.. மத்தவங்க என் முன்னாடியே கேவலமா பேசும்போதுதான் ஒரு மாதிரியா இருக்கும்.. "

"ஆனா நீ மத்தவங்களுக்கு எவ்வளவோ பரவாலம்மா.. bastards.. " தன் பய்யனோட போட்டோவப் பார்த்தார்..

என்ன சொல்றதுன்னு தெரியாமே நான் அவர்ட்ட போய் நின்னேன்..

"உனக்கு பட்டு புடவ கட்ட புடிக்குமா..?"

"புடிக்கும் சார்.. ஆனா எங்க தொழிலுக்கு எதுக்கு சார் புடவையெல்லாம்.. "

"அந்த ரூம்-ல பட்டுபோடவ இருக்கும்.. அதக் கட்டீட்டு அப்படியே நககல்லாம் இருக்கும்.. அதையும் போட்டுட்டு வா"..

ரூம்ல கட்டில்மேல புடவ, நகடப்பா எல்லாம் இருந்திச்சு.. நான் வரேன்னு அவர் எடுத்து வச்சிருக்கனம்.

அவர்மேல சாஞ்சு நின்னேன்... மனுஷன் ஒரு உணர்ச்சியும் காமிக்கல. என்னை உக்காரவச்சிட்டு நவுந்திட்டாரு...

"நீ இந்த புடவைல அழகாயிருக்க.. "

"சார் இப்ப வச்சுக்கலாமா.."

"ச்சேச்ச.. நீ சின்னப் பொண்ணு.. "

அப்போ போன் அடிச்சுது. திடீர்னு பேசீட்டு இருக்கும் போதே "நாயே, Bastard , முடிஞ்சதப் பண்றா" அப்படின்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு. போன்-அ வச்சிட்டு உக்காந்தவரு ஒரு சிகரட்ட பத்த வச்சாரு. சிகரட்ட கண்ணாலயே பத்தவச்சிருக்கலாம்.. கண்ல அவளோ தணல்..

"சார் எதாவது பிரச்சனையா சார்.." எனக்கு அவர அப்படி பார்க்க பாவமா இருந்துச்சு..

"ஒண்ணுமில்லம்மா.. தேவடியா பய்யன்.. என் மகன்.. கால் பண்ணான்.. சொத்தப் பிரிச்சு கேட்கறான்"

"சார் வொங்க பொண்டாட்டீயப் பேசச் சொல்லுங்க சார்.. எல்லாம் சரியாப் போய்டும்..

"அந்த முண்டைனாலதான் இவ்ளோ பிரச்சனையே.."

".. "

"என் தலைல பச்ச பிள்ளைய கட்டீட்டு அவ ஓடிப் போய்ட்டா.. அவன் தறுதலையா நிக்கறான். ஓடுகாலி நாயி. போகும் போதே பிள்ளைய கொன்னுட்டு போய் இருந்தா நான் நிம்மதியாவாவது இருந்திருப்பேன்.." அவர் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சு..

".."

"எவளோ பாசமா இருந்தேன். சொந்த அத்தை பொண்ணு. உனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா சொல்ல வேண்டியது தானே.. அதவிட்டுட்டு எந்த மயிருக்கு பெத்த பிள்ளையையும் கட்டின புருஷனையும் விட்டுட்டு ஓடிப்போகனும்.. "

பொலம்பீட்டே இருந்தவரு திடீர்ன்னு குழுங்கிக்குழுங்கி அழ ஆரமிச்சிட்டார்.. என்னவோ மாதிரி ஆயிடுச்சு.. அந்த பொம்பளைக்கு எப்படி இப்படிப்பட்ட ஆம்பளைக்கு துரோகம் பண்ண மனசு வந்திச்சு.. பாவம் இருவது இருவத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்தத நினைச்சு இன்னமும் அழுதிட்டிருக்காரு...

கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு என் பக்கத்துல வந்தாரு. கைல சிகரெட். அப்போதான் பார்த்தேன்.. புடவைல நிறைய எடத்துல சிகரெட்டால சூடு போட்ட ஓட்டை.