Tuesday, June 30, 2009

பயணம் - உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக..

340L பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. மிகுந்த சிரமப்பட்டு, எனது பெரும் உடலை வருத்தி, இருபது மீட்டர் ஓடி ஏறிக்கொண்டேன். நடத்துனரை முறைத்தபடியே பயணச் சீட்டைப் பெற்றுகொண்டேன். அவன் அதை பொருட்படுத்தவில்லை. கிடைத்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ஏனோ பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன்.

*******************************************************

"உன்னை மாதிரி ஆளுங்கனால தாண்டா பூமியே அழியப்போகுது" என்று கூறி என் வாதத்தை வைத்தேன். அவன் என்னிடம் கேட்ட கேள்வி "ஏன்டா டெய்லி மாக்கன் மாதிரி பஸ்-ல போயிட்டு இருக்கே. சம்பாதிக்கற.. ஒரு பைக் வாங்கிக்கலாமில்ல.. சரியான கஞ்சண்டா நீ".
எனக்கு தெரியும் அவன் என்னை புரிந்துகொள்ள போவதில்லை. இது போன்ற வாக்குவாதங்கள் எங்களுக்குள் தினமும் நடைபெறும். லாகூர் குண்டுவெடிப்பில் தொடங்கிய எங்கள் விவாதம் பாகிஸ்தான் ராணுவம் , காஷ்மீர் விவகாரம் , இமயமலை , சிதோஷன மாற்றம், எரிபொருள் சிக்கனம் என்று பல உருவங்கள் மாறி இப்பொழுது நான் பேருந்தில் பயணம் செய்யும் மடத்தனத்தை பற்றி விவாதித்தோம். பல தலைப்புகள் மாறினாலும் எனக்கும் அவனுக்கும் இருக்கும் கருத்து வேற்றுமை மட்டும் அப்படியே பூரணமாக இருந்தது. அவன் - என் உயிர் நண்பன் சாமி. அலுவலகத்தில் சாம். சாமி என்னை விட மாதம் ரூ.5,000 குறைவாக சம்பாதிக்கிறான். ஒரு Karizma பைக்கும், மாருதி 800 காரும் வைத்திருக்கிறான். டாடா நானோவிற்கு முன்பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர வேறு தகவல்கள் உங்களுக்கு தேவையற்றது. இக்கதை அவனைப்பற்றியதில்லை. நான் நந்தன். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தில் கணிப்பொறியாளன். எனது ஒன்றரை மாத சம்பளத்தில் ஒரு karizma வாங்கி விடலாம். என்னிடம் இருப்பது Gear cycle. சாமியின் பேச்சைக்கேட்டு என்னை கஞ்சனாக உருவகப்படுத்திவிடாதீர்கள். நான் ஒரு சுற்றுப்புறச்சூழல் பாதுகாவலன். நேற்றுகூட நீங்கள் என்னோடு என் அலுவலகத்துக்கு வந்திருந்தால் யாருமில்லாத அறைகளில் வீணாக எரிந்துகுண்டிருந்த 17 மின்விளக்குகளை நான் அணைத்ததை கண்டிருப்பீர்கள். இது போன்று மின்சாரத்தையும், பெட்ரோல்-டீசலையும், தண்ணீரையும், எந்த ஒரு இயற்கை வளத்தினையும் விரயம் செய்பவர்களை மாறுகை மாறுகால் எடுக்கவேண்டும். ம்ம்ம்ம்ம்ம்.. வேண்டாம்.. எதாவது ஒரு ஆப்பிரிக்காவின் வறண்ட கிராமத்துக்கு அனுப்பவேண்டும். . அல்லது இதே பூமியில் அவர்கள் 100 வருடங்களுக்கு பின் மீண்டும் பிறக்கவேண்டும். இயற்கை வளங்களை நாம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதாலேயே நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை மறுக்கிறோம். அதனாலயே மிக அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாமல் நான் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை. பைக்கில் 20 நிமிடத்தில் அடையவேண்டிய அலுவலகத்தை மூன்று பேருந்துகள் மாறி, ஒவ்வொரு நடத்துனரிடமும் இரண்டு ரூபாய் சில்லறையைப் பறிகொடுத்து அடைகிறேன்.

ஜனவரி மாத விடியல்நேர பெங்களூர் குளிரில் படுக்கையை விட்டு எழுவது சற்று சிரமமான காரியம. அன்று ஐந்து நிமிட தாமதத்தால் 340L பேருந்தை தவறவிட நேர்ந்தது. ஓட்டுனரின் சௌகரியதிற்கு ஏற்ப பேருந்துகளின் வருகை நிகழ்வது இந்திய நியதி போலும். அன்று என் நேரம்.. ஓட்டுனருக்கு கடமை உணர்ச்சியும் நேரம் தவறாமையும் ஏற்பட்டு எனக்கு சிக்கலை உண்டாக்கியது. இங்கே நான் வசிக்கும் கைகொன்றஹள்ளி பற்றியும் சொல்லியாக வேண்டும். அது ஒன்றும் பெங்களூரின் புறநகர் பகுதியில்லை. மேலும் இரண்டரை மைல் சென்றால் வருமே கசவனஹள்ளி அதுதான் புறநகர் பகுதி. கைகொன்றஹள்ளியில் பல குடியிருப்புகளும், பள்ளிகளும் , அங்காடிகளும் வந்தாலும் இன்னும் சீரான பேருந்து வசதியில்லை. அதனால் ஒரு பேருந்தை தவறவிட்டோமேயானால் அடுத்த பேருந்துக்காக மூன்று மணிநேரம் காத்திருக்கவேண்டும். எப்படியாவது ஹோச ரோடு சென்றுவிட்டால் அங்கிருந்து உடனே பேருந்தை பிடித்து அலுவலகம் சென்றுவிடலாம். பேருந்தை விட்டுவிட்டதால் ஆபத்பாந்தவனாக வரும் ஆட்டோவிற்காகக் காத்திருந்தேன். ஆபத்பாந்தவனுக்கு சேவைக் கட்டணம் அறுபது ரூபாய். மழைக்காலத்தின் போது அதுவே முந்நூறு ரூபாயாக மாறும். அடுத்த நாள் மழை பெய்யாது. அன்று எந்தவொரு ஆபத்பாந்தவனும் என் கண்களுக்கு தென்படவில்லை. சாலை பரபரப்பாகத் தொடங்கியது. வாகனங்களும் மக்களை போன்றவையே. பல வர்ணங்கள் . பல ரகங்கள் . உயரமாகவும் , குட்டையாகவும் , ஒல்லியாகவும் , குண்டாகவும் பல தோற்றங்கள். மனிதர்களை போலவே மதங்களாலும் பிரிக்கப்பட்டுள்ளன. சில தீவிர மதப்பற்று கொண்ட வாகனங்கள் "ஜெய் ராம் " என்றோ "Praise the lord" என்றோ தனது நெற்றியில் ஒட்டிக்கொண்டிருந்தன. தனது முன்னே போகும் போட்டியாளனை முந்தவேண்டும் என்று தனது சக்தி முழுவதையும் திரட்டி, மிகுந்த உறுமலுடன், மூச்சை இழுத்து விட்டுச்சென்று கொண்டிருந்தன.

நான் இருபது நிமிடமாக கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த பெண் கல்லுரி வாகனத்தில் ஏறிச்சென்று விட்டிருந்தால். பேருந்து நிறுத்தத்தில் நான், அழுக்கு வேட்டிகட்டி தோளில் மண்வெட்டி வைத்திருந்த முதியவர், அழுக்கு ஜீன்ஸ் போட்ட பரட்டைத்தலை இளைஞன் மற்றும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடுவயது ஆள் ஆகியோர் காத்திருந்தோம். நடுவயது ஆள் கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்திலும் "lift" கேட்டுக்கொண்டிருந்தான். நான் ஒதுங்கி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற வெள்ளை நிற, மஞ்சள் போர்டு டாடா இன்டிகா, நடுவயது ஆள் கை காட்டியதைப் பார்த்தும் நின்றது. அந்த ஆள் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். இளைஞனும், முதியவரும் ஓடிச்சென்று பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர். கார் புறப்படும் தருவாயில் நீண்ட யோசனைக்குப் பின் நானும் ஏறிக்கொண்டேன்.

காரின் டாஷ் போர்டில் விநாயகர் போன்ற ஒரு ஒரு சிலையும், தெலுங்கு mp3 குறுந்தகடும், இரண்டு லிட்டர் பெப்சி பாட்டிலில் அழுக்குத் தண்ணீரும் இருந்தது. முன்னிரவின் தூக்கமின்மையால் கார் ஓட்டுனரின் கண்கள் வீங்கி இருந்தது. நீங்கள் அவனைப் பார்த்தல் நிழல்கள் ரவியின் ஒன்று விட்ட சித்தப்பா மகன் என்று கட்டாயம் சொல்லுவீர்கள். ஓட்டுனரும் நமது நாடு வயது ஆளும் கர்நாடக அரசியலை மாட்லாடிக்கொண்டு வந்தனர். "குவார்டர்ஸ்" வந்ததும் அந்த நடுவயது ஆள் வண்டியை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் நூறு ருபாய் தாளை நீட்டிப் பல்லிளித்தான்.
டிரைவர் "பேட சார்.. சேன்ஜ் இல்லா.. நாளே.. " சொல்லி வண்டியை எடுத்தான்.
அடுத்த திருப்பத்தில் முதியவரும், இளைஞனும் ஆளுக்கு பத்து ருபாய் கொடுத்து இறங்கிக் கொண்டனர். சாலையோரத்தில் ஒரு பல மாடிக் கட்டிடம் உருவாகிக் கொண்டு இருந்தது. அவர்கள் கூலித் தொழிலாளிகளாக இருக்கலாம்.

டிரைவர் வண்டியை எடுத்தபடியே
"சாப் தூ கஹாந்?" என்றான்.
"ஹோச ரோடு" என்றேன்.
"சாப் வோ ஆத்மி.. டெய்லி.. " என்று ஹிந்தியில் ஏதோ சொன்னான். எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் ஒருவாரு புரிந்து கொண்ட சாராம்சம் இதுதான். அந்த நாடு வயது ஆள் தினமும் இப்படித்தான் நூறு ரூபாய்த் தாளை நீட்டுவான் என்றும் தன்னிடம் சில்லறை இல்லாதபடியால் வேண்டாம் என்று சொல்லி விடுவேன் என்றும் சொன்னான். ஓசியிலேயே வரும் இவனுங்களை எல்லாம் நடுவழியிலயே இறக்கி நடக்க வைக்க வேண்டும் என்றான்.
நான் சட்டைப் பையில் இரண்டு பாத்து ரூபாய் இருப்பதை உறுதி செய்துகொண்டு,
"இஸ் ஆத்மியோன் கோ ஐசா ஹி கர்நா ஹை" என்று ஆமோதித்தேன்.
"லேகின் வோ தோ போலீஸ் ஹை சாப்.. மா கி ***" என்றான்.
எனக்குத் தெரிந்த ஹிந்தி வார்த்தைகளை உபயோகப்படுதிவிட்ட திரிப்தியில் நான் மௌனமானேன்.

சில நொடி அமைதிக்குப் பின்,
" க்யா நாம் ஹை சாப்? ".
"நந்தன்"
"அந்த்ரவா சார் ?"
"நஹி.. தமிழ்நாடு "
"சார்.. நம்ப நேட்டிவ்வும் தமிழ்நாடுதான் சார்.. கிஷ்ணகிரிக்கு பக்கத்துல.ஆனா பெங்களூர்ல செட்டில்லாகி முப்பது வர்சமாச்சி சார்"
"பேரு என்ன? "
"பைலப்பா சார். எட்டு வர்சமா கேப் ஒட்டினுர்க்கன். அதுக்கு முன்ன லாரிக்கு போயிற்றுந்தேன் சார்.. "
எனது அடுத்த கேள்விக்கான பதிலையும் சேர்த்து சொன்னான்.
"ம்ம்ம்.."
"சார் நீ என்ன சார் பண்றே ? IT கம்பெனியா?"
"அமாம். . எலேக்ட்ரோனிக் சிட்டில ".
"சார் நானும் EC- தான் சார் போறேன்.. எந்த கம்பெனி சார்.. இன்போசிஸா சார்.. என் ஊடு அதுக்கு அந்தாண்டதான் சார் இருக்கு ".
வாக்கியத்தின் தொடக்கத்திலோ , முடிவிலோ மத்தியிலோ அல்லது அணைத்து இடங்களிலும் "சார்" வைத்தான்.
"இன்போசிஸ் பக்கத்துலதான் என் ஆபீஸும் ".
"சார் இன்ன சம்பளம் சார்?"
"12000 " பொய் சொன்னேன்.
"இப்போ ஒரு அம்மாவை ட்ராப் பண்ணிட்டு வர்றேன் சார்.. அதுக்கு ஒரு லட்சம் சம்பளம்.. சார்"
அவனே தொடர்ந்தான் .
"அந்த அம்மாவ நான்தான் சார் டெய்லி ட்ராப் பண்ணுவேன்.. பேரு மீனாட்சி குல்கர்னி சார்.. ரெண்டு பசங்க. ஆனா பார்த்தா அப்படித் தெரியாது".
எப்படித் தெரியாது என்று நான் கேட்கவில்லை. இன்போசிஸ் நெருங்கி வந்திருந்தது.
"சார் டெய்லி இந்தப் பக்கமா தான் சார் வருவேன் .. உங்களை டெய்லி பிக்-அப் பண்ணட்டான் சார்?"
" வேண்டாம்ப்பா.. நான் பைக்ல தான் போவேன். இன்னைக்கு பைக் பன்க்ட்சுர் அதான்.." பொய் சொல்லி இருபது ரூபாய் கொடுத்தேன். மீதி ஐந்து ரூபாய் கொடுத்தான். பேருந்தில் சென்றிருந்தால் முப்பது ரூபாய் ஆகியிருக்கும்.

அடுத்த நாள் வழக்கமான நேரத்துக்குத் தயாராகியிருந்தாலும் அரை மணிநேரம் டீவி பார்த்துக் கிளம்பினேன். அந்த பிரபலமான நடிகையின் அங்கங்களை வெளிப்படுத்தும் பாடலை ஒரு தந்தை தனது பெண்ணின் பிறந்தநாள் வாழ்த்தாக "dedicate" செய்திருந்தார். நடனம் நன்றாகவே இருந்தது. பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது முதல்நாள் பார்த்த கல்லுரி மாணவி அங்கு இல்லை. நான் , முதியவர் மற்றும் ஜீன்ஸ் இளைஞன் நின்றிருந்தோம் . எதிர்பார்த்தபடியே பைலப்பாவின் கார் வந்தது. நின்றது. இளைஞன் ஓடிச் சென்று முன்னிருக்கையில் அமர முனைகையில் அவனை பின்னிருக்கையில் அமரும்படி சொன்னான். நான் முன்னே அமர்ந்தேன். இளைஞனின் விரோதப் பார்வை என் மேல். ஏன் பைக்கில் செல்லவில்லை என்று அவன் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் இறங்கியபின் பைலப்பா பேச்சைத் தொடங்கினான்.
"நந்தா சார்.. இவனுங்கள இனிமேல் வண்டீல ஏத்த வேண்டாம்ன்னு பார்கறேன் சார்" (எனது பெயரை நினைவில் வைத்திருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை)"
ஏன்?"
"வண்டியை கலீஜ் ஆக்கீரனுங்க சார். என் முதலாளி எனக்கு டோஸ் கொடுக்கறான்..
குளிக்கரானுன்களோ இல்லியோ டெய்லி குடிப்பானுங்க சார்"
"நீ குடிக்க மாட்டியா?"
"எப்பவாவுது சார்.. குடிச்சா குடும்பத்த எப்படி சார் காப்பாத்துறது.. பய்யன் ஒன்னாவது படிக்கறான்.."
"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? பார்த்த தெரியல.."
"அது அப்போவே ஆயிடுச்சு சார். . பெரிய கதை.. " ஒரு கையை பின்னே சுழற்றி எப்போவே என்று உணர்த்தினான்.
"காதல் கல்யாணமா ?"
"பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணு சார்.. பழகீட்டு இருந்தோம்.. திடிர்னு கர்பமாயிட்டா. அதனாலே கல்யாணம் கட்டிகிட்டேன்" சொல்லிச் சிரித்தான்.
இவன் ஒன்றும் செய்யாமல் எப்படி அவள் திடீரென்று கர்ப்பமாவாள் என்று நினைத்து கொண்டேன்.
"அப்போ கல்யாணமானவிடனே குழந்தை பொறந்துருச்சா?"
"இல்ல சார் அது கலஞ்சு போச்சு. இது ரெண்டு வருஷம் கலிச்சு பொறந்தது. சார் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
"இல்லப்பா.."
"உனக்கு என்ன சார்.. கூட வேலை பாக்குற பொண்ணுங்க எல்லாம் கொழுக் மொழுகக்னு சேட்டு பொண்ணுங்களா இருக்கும்."
"அப்படில்லாம் ஒன்னும் இல்லை.. "
"சார்.. உனக்கு தெரியாது சார்.. நான் பார்க்குறேன் இல்ல.செம கம்பெனி கொடுப்பாங்க சார்."
"நான் அதெல்லாம் கண்டுக்கறதில்ல. உனக்கு அந்த மாதிரி இருக்கா?"
"ஒருத்திய வச்சிருக்கேன் சார். எப்போவாவது சார். பாமிலிய பாத்துக்கணும் இல்ல"

கொஞ்சம் கொஞ்சமாக பைலப்பா எனது ஆஸ்தான சாரதியாகிவிட்டான். அவன் பெலண்டுர் வந்ததும் எனக்கு மிஸ்டு கால் கொடுக்க, நான் புறப்பட்டு பேருந்துநிலையம் வந்து நின்றுவிடுவேன். ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுவான். தினமும் நடிகைகளைப் பற்றி, திரைப்படங்களைப் பற்றி, தெரு நாய்களைப் பற்றி என்று ஏதாவதொன்றைப் பற்றி பேசிக்கொண்டே வந்தான். பேச்சும் சுவரஸ்யமாகவே இருக்கும். பேச்சைக்கொண்டே அவன் பெண்களை வசியம் செய்திருக்கவேண்டும்.

ஒரு நாள் எனது அலுவல் சம்பந்தமாக சீக்கிரம் செல்ல வேண்டியிருந்ததால் அடுத்த நாள் வரப்போவதில்லை என்று கூறினேன்.
"பைலப்பா நாளைக்கு வர வேண்டாம் "
"ஏன் சார்?"
"நாளைக்கு ஆறு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும் .. கொஞ்சம் வேலை இருக்கு"
"எத்தன மணிக்கு கிளம்புவே சார்?"
"5:30க்கு கிளம்புவேன்.. உனக்கு எதுக்கு சிரமம் "
"என்ன சார் இப்படி சொல்றே . . பிரிண்ட்ஷிப்ல என்ன சார் சிரமம்".
அடுத்த நாள் 5:15 க்கு மிஸ்டு கால் வந்தது.

இந்த சம்பவத்துக்குப் பின் அவன் எனது அத்யந்த நண்பனான். சேவகன் என்றே சொல்லலாம். நான் எதைச் செய்ய சொன்னாலும் செய்யக் காத்திருந்தான். ஒரு முறை என்னிடம்
"சார் சடுர்டே MG ROAD போலாமா சார்.. கலக்கலா இருக்கும்" என்று கூறி கண்ணடித்தான்.
மற்ற பெண்களின் மேல் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் தனது குடும்பத்தை நன்றாகவே வைத்திருந்திருக்க வேண்டும்.

"சார், பேக்கரி போயிட்டு போலாம் சார்.. பய்யனுக்கு கேக் வாங்கணும்.."

"சார், அந்த படமா சார்.. போர் சார்.. நேத்திக்குத்தான் என் பொண்டாட்டியோட போய்ப்பார்த்தேன்"

"சார் இந்தா சார்.. சாபிட்டுப்பார் சார்.. நானே பண்ணது.. பொண்டாட்டிக்கு ஒடம்பு செரில சார் அதான்.."

பைலப்பா, வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பூரணமாக வாழ்பவனாக இருந்தான்.
"அதெல்லாம் சுத்த பேத்தல் சார்.. நாம நம்ம லைஃப்ப என்ஜாய் பண்ணனும் சார்.. நூறு வருசத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு யாருக்கு சார் தெரியும்".
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை எளிமையாகவே பார்த்தான்.
"சார் ஒரு சின்ன அக்சிடென்ட் சார்.. நாலு பேர் அவுட்.."

ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக சோர்ந்து காணப்பட்டான். வண்டியும் ஊர்ந்து வந்தது.
"என்ன பைலப்பா டல்லா இருக்க?"
"பாமிலில ப்ராபளம் சார்.. என்னோட செட்-அப் பத்தி அந்த ராட்ச்சஷிக்கு தெரிஞ்சிருச்சு சார்" மனைவியைக் குறிப்பிட்டான் ..
"......."
"நேத்திக்கு வேலைக்குப் போக விடாம ஒரே சண்டை சார்.. நான் அவளை ராணி மாதிரி வச்சிருக்கேன் சார்". கண்ணீர் வெளிவராமல் இமை தடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் உபரிநீர் வெளியேறியது.
"......"
"பய்யனுக்கும் ஒரே காய்ச்சல்.. வாந்தி..சார்"
"டாக்டர்ட்ட காமிச்சியா ?"
"காமிச்சேன் சார்.. வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு டாக்டர் இருக்காரு சார்.. மருந்து எழுதி கொடுத்திருக்காரு.. சார்".
ஒரு மருந்துக்கடை ஓரம் வண்டியை நிறுத்தி..
"ஒரு நிமிஷம் சார்..மருந்து வாங்கீனு வந்துர்ரன் .."
"சரிப்பா.." கடிகாரத்தைப் பார்த்தேன்.. இன்னும் நேரம் இருந்தது.
திரும்பி வந்தவன்
"சார் ஒரு 200 ரூபாய் இருக்குமா சார்.. என் பர்ஸ வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டன் சார்.."
பணத்தை தேடுவது போல தேடி 500 ரூபாய்த் தாளை மறைத்து 200 ரூபாய் கொடுத்தேன்.
"ரொம்ப தேங்க்ஸ் சார்.. பய்யனுக்கு மருந்து சார்"
"பரவாலப்பா .."

அடுத்த நான்கு நாட்கள் அவன் வரவில்லை. அவன் வராததால் ஆட்டோ பருந்துகளுக்கு இரையாகிப் போனேன். அவனது செல்பேசியில் அவனை அழைக்க என் மனம் ஏனோ இடம் தரவில்லை. கண்டிப்பாக மனைவியுடனான அவனது சண்டை முத்தியிருக்க வேண்டும். அவனை சில நாட்களுக்காகவாவது பிற பெண்களின் சகவாசங்களை விட்டுவிடச் சொல்லலாம் என்றிருந்தேன். அவன் என்னிடம் தொடர்பு கொண்டு அறிவுரை கேட்காமல் இருந்ததில் எனக்கு அவன் மேல் மிகுந்த வருத்தம்.

நேற்று , ஐந்து நாட்களுக்குப் பின் அவனிடம் இருந்து மிஸ்டு கால் வந்தது. நான் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அவனுக்காகக் காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு. இம்முறை அழைப்பை ஏற்றேன் .
"ஹலோ.. "
"ஹலோ சார்.. பைலப்பா பேசறேன் சார்.." குரல் கம்மியது.
"சொல்லு பைலப்பா.."
" சார்.. எனக்கு வேலை போய்டுச்சு சார்.." அழுதேவிட்டான் .
"ஏன் என்ன ஆச்சு ?"
"நாலு நாள் லீவ் போட்டதுனாலே வேற ஒரு டிரைவர வேலைக்கு வச்சிட்டான் சார் ஓனர்"
"விடு பைலப்பா.. வேற எடத்துல வேலை கிடைக்கும்"
"அதில்ல சார்.. எம்.. எம் பய்யன்- க்கு மஞ்ச காமாலை சார்.. ரொம்ப சீரியஸா -" வார்த்தை தடுமாறியது.
"கண்டிப்பா குணமாயிடுவான். நீ கவலைபடாதே. எந்த ஆஸ்பத்ரீலா சேர்த்திருக்க?"
"மணிபால்-ல சார்.. பய்யன் நோஞ்சான் மாதிரி ஆயிட்டான் சார்.. எத சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கறான் சார்.. எதேதோ டெஸ்ட் எடுக்கணுங்கறாங்க சார்.. என் பய்யன நீங்க தான் சார் காப்பாத்தனும் .. " தொடர்ந்து அழுதான்.
"எவளோ வேணும் பைலப்பா?"
"சார் ஒரு 5,000 இருந்தா போதும் சார்.. என் பய்யன எப்படியாவது காப்பாத்திடுவேன் சார்.."
"பைலப்பா நீ எனக்கு நாளைக்கு போன் பண்றியா.. நான் சொல்றேன்.."
"சார் ப்ளீஸ் சார்.. கண்டிப்பா கொடுத்துடுவேன் சார்.. நம்புங்க சார்.. கண்டிப்பா.."
"அதில்ல பைலப்பா மாசக் கடைசி அதான்.. நீ நாளைக்கு போன் பண்ணு.. நான் சொல்றேன் "
"சார்.. சார்... ."
"பைலப்பா எனக்கு நீ பேசுறது ஒழுங்கா கேக்கல.. நீ நாளைக்கு கால் பண்ணு.. நான் சொல்றேன்" என்று வைத்தேன்.

இன்று, 340L பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. மிகுந்த சிரமப்பட்டு எனது பெரும் உடலை வருத்தி இருபது மீட்டர் ஓடி ஏறிக்கொண்டேன். நடத்துனரை முறைத்தபடியே பயணச் சீட்டைப் பெற்றுகொண்டேன். அவன் அதை பொருட்படுத்தவில்லை. கிடைத்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
*******************************************************

2 comments:

இரா. வசந்த குமார். said...

கதை நன்றாக இருக்கின்றது. மின்னஞ்சல் ஐ.டி. கொடுத்தால் என் கருத்துகளை விளக்கமாக கூறலாம். இல்லாவிட்டால் இதிலேயே சொல்கிறேன்.

நன்றிகள்.

PPattian said...

நல்லாயிருக்குங்க கதை.. ஆரம்பத்தில் சில இடங்களில் அட்வைஸ் தொனி தூக்கலாக இருப்பது போல் தோன்றுகிறது.